February 19, 2025

காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு அம்மை, இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்மயமாகுதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வன அழிப்பு, மனிதர்களின் சமூக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாக தான் புதிய நோய்கள் பரவுகிறது. பருவநிலை மாற்றம், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுகிறது.

நோய் தொற்றியவர்களை கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதி, அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார். “இதுசம்பந்தமாக உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வழங்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நான் வக்கீலாக இருந்த போது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பரிந்துரைத்த மருந்து இல்லை என நர்ஸ் தெரிவித்தார்.

பிறகு டாக்டர் வலியுறுத்திய பின், அந்த மருந்து எனக்கு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதியையும் உருவாக்கவேண்டும்” என்றும் நீதிபதி கூறினார். இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறையை வகுப்பது, புகார் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.