January 23, 2025

கண் மறைந்த மூன்று கோடி ரூபாயும், கண்டெடுக்கப்பட்ட கதையும்

ஓர் உதவி பெரிதாக இருந்தால்தான் கேட்பதற்கும் படிப்பதற்கும் சொல்வதற்கும் மதிப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிறிய பிரச்னைகள் தீர்க்கப்படும்போது கிடைக்கப் பெறும் உதவிகள் பல நேரம் பேசப்படுவதில்லை. எழுதுவதற்குக்கூட அவற்றில் சுவாரஸ்யமில்லை என்பதே பெரும்பான்மைப் பார்வையாக இருக்கிறது.

அவ்வாறன்றி, சில சிறுசிறு சம்பவங்களை இனி படிப்போம். முதலில், கண்மறைந்த மூன்று கோடி ரூபாயும் பின் அது மீண்டு வந்ததும். என் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக (CFO) நான் பலதுறைகளின் செயல்பாடுகளை review செய்வதுண்டு. அவற்றில் முக்கியமானது cash review. வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதற்கென்றே ஒரு துறை என் நிறுவனத்தில் தனியே இயங்கி வந்தது. எனக்குக் கீழே ஒரு அதிகாரி, அவருக்குக் கீழே ஓரிருவர். அந்த ஓரிருவரில் நிதின் ஷர்மா என்பவர் நேர்மையான, திறமைசாலியான, ஒரு சகா. அவர் ஏற்றுமதி வியாபாரத்தை அப்போது கவனித்துக் கொண்டிருந்தார்.

என்னுடைய ஆய்வில் அன்றைய ஏற்றுமதிக்கான வரவுகள் உறுதி செய்யப்பட்டன. அந்த மாதம் முடிய ஒரு வாரமே இருந்தது. ஏற்றுமதி வரவுகள் பெரும்பாலும் letter of credit மூலமே வரும். இது ஒரு முக்கிய ஆவணம். தகுந்த நாளில் நாங்கள் இந்த ஆவணத்தை எங்கள் வங்கிக்கு அனுப்ப, அவர்கள் அதை வெளிநாட்டிலுள்ள வாடிக்கையாள-ரின் வங்கிக்கு அனுப்பி, அவர்கள் வாடிக்கையாளரின் ஒப்புதலுக்குப் பிறகு எங்களுக்குப்பணப் பரிமாற்றம் செய்வார்கள். சாதாரணமாக இந்த முறையில் பணம் கைக்குக் கிடைக்க ஒரு வாரம் ஆகலாம்.

எங்களுக்கு அந்த வகையில் அந்த மாதம் சுமார் 3 கோடி ரூபாய் வரவேண்டியிருந்தது. என் கேள்விகளுக்கெல்லாம் உறுதியாக பதிலளித்து வந்த நிதின் ஏனோ இதற்கு சரியாக பதில் சொல்லவில்லை என்று தோன்றிற்று.

ஆய்வு முடிந்து நான் வேறு அலுவலுக்குப் போகும்போது நிதின் வந்து, “சார் உங்களிடம் ஓர் உண்மை சொல்ல வேண்டும்” என்று மெல்ல இழுத்தார்.

ஓர் அதிகாரியாக இந்த நிறுவனத்தில் நான் கற்ற பாடம் crisis management. அதாவது எதிர்பாராத அதிர்ச்சிகளைச் சமாளித்து குறிக்கோளை அடையத் தொடர்ந்து முயற்சித்தல். என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி, அவர் மேலும் பேசும்வகையில் அவரைப் பார்த்தேன்.

“சார், அந்த 3 கோடிக்கான letter of credit காணாமல் போய்விட்டது. வரவே இல்லையா, அல்லது வந்துவிட்டுத் தொலைந்ததா என்று தெரியவில்லை.”

என் உணர்வுகள் உங்களுக்கு நான் சொல்லாம-
லேயே புரிந்திருக்கும். எவ்வளவு பெரிய, சிக்கல்!
மாதம் முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.
எங்கள் வரவுப் பட்டியலில் அதுதான் அந்த
மாதத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அதனால்
வெகு சுலபமாக அனைவரின் கவனமும் அது
வரவாகிவிட்டதா , என்ன ஆயிற்று என்று
அதன்மீது தான் இருக்கும். நான் மட்டுமல்லாமல்,
எனக்கு மேலே டெல்லியில் உள்ள தலைவர்கள்,
வெளிநாட்டில் உள்ள மேலாளர்கள் எல்லாரும்
இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இங்கோ, ஆவணமே காணோம்! இது
மிகப்பெரிய அளவில் பொறுப்பின்மையை
அல்லவா காட்டும்! என்னளவில் சிறு எச்சரிக்கையோடு போகும் இது, நிதின் அளவில் வேலையை அல்லவா பறித்துவிடும். அவரைப் பொரிந்து தள்ளி விட்டேன்.

நிதின் ஒரு அருமையான, கடுமையான உழைப்பாளி. அவர் வேலையில் இதற்கு முன்பும் பிறகும் நான் எந்தத் தவறும்
கண்டதில்லை. இது அவருக்கு ஒரு சோதனை, கோபம் தணிந்து நான் அவசர கதியில் மாற்று ஏற்பாடுகளைச்
செய்யப்பணித்தேன் . பின்னர் அமைதியாக “என்னப்பா, at least என் மேஜை மேலிருக்கும் ஸாயியிடம் சொல்லியிருக் கலாமே! சரி, போய் ஆக வேண்டியதைப் பார்” என்று சொல்லி நகர்ந்தேன். அவர் ஓரிரு நிமிஷங்கள் தலை குனிந்தவாறு இருந்துவிட்டுப் பின் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டார்.

மறுநாள் நான் என் இருக்கையிலிருக்கும் போது அவசரம் அவசரமாக என்னைப் பார்க்க வந்தார், நிதின். என் நெற்றிச் சுருக்கத்தில் ‘ இன்று என்ன அதிர்ச்சியோ?’ அதிர்ச்சிதான்! ஆனால் நல்ல அதிர்ச்சி. அவர் பேசியவாறே சொல்கிறேன்.

“ஸார் letter of credit கிடைத்துவிட்டது! டெல்லியிலிருந்து mail வந்திருக்கிறது. நமக்கு வரவேண்டிய தபால் அங்கே
போய்விட்டது . ஒரு மாதமாகக் கேட்பாரற்று இருந்திருக்கிறது. நாளை கைக்குக் கிடைத்துவிடும். நான் மற்ற ஏற்பாட்டைச் செய்கிறேன். நீங்கள் உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி இந்த மாதக் கணக்கிலேயே இதை வரவு வைக்கும்படி செய்யுங்கள், தயவுசெய்து!”

இதுதான் நல்ல அதிர்ச்சி என்றால், அவர் அடுத்து சொன்னதுதான் என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்கமுடியாதது.

“நீங்கள் நேற்று சொன்னவுடன் உங்கள் மேஜை மீது உள்ள ஸாயியிடம் மனதார வேண்டிக் கொண்டேன். அதற்கு பதிலும் பலனும் கிடைத்துவிட்டன!”

அவர்மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பார்க்கப்போய்விட்டார். அவருக்குப் பெரிய நிம்மதி. அது தந்த உற்சாகம்.

நானோ அதிசயத்துடன் என் மேஜை மீதிருந்த ஸாயியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.