எஸ்.பி.ஐ. வங்கிகளில் போலி முகவரிகளை கொடுத்து கணக்கை தொடங்கி உள்ள வடமாநில கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தமிழகம் முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் வடமாநில கொள்ளையர்கள் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களில் இருந்து கொள்ளையர்கள் நூதன முறையில் பணத்தை எடுத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அழகப்பா ரோட்டில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை போனது. தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் ரூ.70 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது.
கடந்த 17-ந்தேதி இந்த வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த 2 பேர் பணம் செலுத்தும் எந்திரத்தில் இருந்து இந்த பணத்தை எடுத்துள்ளனர்.
இதே போன்று ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், வடபழனி 100அடி சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.69 ஆயிரமும் அடுத்தடுத்து கொள்ளை போனது.
தரமணியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.7 லட்சமும், வேளச்சேரியில் ரூ.5 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் சின்மயா நகர் ஏ.டி.எம். மையத்தில் ரூ.50 ஆயிரம் பணம் பறிபோனது.
சென்னையில் மட்டும் இதுபோன்று 14 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையர்கள் பணத்தை திருடி இருப்பது தெரியவந்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதே போன்று பணம் திருடப்பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
எஸ்.பி.ஐ. வங்கிகளில் போலி முகவரிகளை கொடுத்து கணக்கை தொடங்கி உள்ள வடமாநில கொள்ளையர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இப்படி திருடப்பட்ட பணம் அனைத்தும் வங்கியின் பணமாகும்.
பணம் செலுத்தும் எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை செலுத்தி அதில் இருந்து பணம் எடுத்ததும் சில வினாடிகள் பணம் வெளியில் வரும் பகுதிகளில் கைகளால் பிடித்து வைத்திருப்பதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணம் வெளியில் செல்லாதது போன்று காட்டும் தொழில்நுட்பம் ஏ.டி.எம்.மில் உள்ளது. இதனையே கொள்ளையர்கள் கண்டுபிடித்து நூதன கொள்ளையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்… வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை- முக்கிய குற்றவாளி கைது
இதையடுத்து நேற்று எஸ்.பி.ஐ. வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் அளித்தார்.
அப்போது பணம் செலுத்தும் எந்திரத்தில் உள்ள தொழில் நுட்ப பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. உடனடியாக பணம் செலுத்தும் மையத்தில் பணம் எடுப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. உடனடியாக அவர்கள் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கினர்.
அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
சென்னையில் பல இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முதலில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கைது
இந்த நிலையில் வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் நேற்று இரவே அரியானா புறப்பட்டு சென்றனர். இன்று காலை அரியானாவில் முக்கிய கொள்ளையர்கள் 2 பேர் பிடிபட்டனர். மேலும் 2 பேர் டெல்லியில் சிக்கியதாக கூறப்படுகிறது.
பிடிபட்ட அனைவரையும் அரியானாவில் ஒரே இடத்தில் வைத்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள ஏ.டி.எம். மைய கேமராவில் பதிவான 2 பேரின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரிந்தது. அதனை வைத்து போலீசார் அரியானா மற்றும் டெல்லிக்கு சென்று கொள்ளையர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
சென்னையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் 4 பேர் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்கள் 4 பேரும் தனித்தனியாக 2 குழுவாக பிரிந்து சென்று ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டி உள்ளனர்.
நேற்று முன்தினம் வரையில் ரூ.48 லட்சம் அளவுக்கு தமிழகம் முழுவதும் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை நடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பெரியமேட்டில் இருக்கும் ஏ.டி.எம். மையத்தில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.64 லட்சத்தை ஏ.டி.எம். மையங்களில் சுருட்டி உள்ளனர்.
ரூ.1 கோடி வரையில் கொள்ளையர்கள் திருடி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More Stories
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளித்த இந்தியா