October 11, 2024

என்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தி.மு.க. உறுப்பினர்கள் என்னையும், தலைவர்களையும் புகழ்ந்து பேசுவதை குறைத்துவிட்டு மானிய கோரிக்கையை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய கடலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் நீண்ட நேரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த தலைவர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரை அதிக அளவில் புகழ்ந்து பேசினார்.

சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக மு.க.ஸ்டாலினை பற்றி பல்வேறு வார்த்தைகளை கூறி அவர் புகழ்ந்து பேசியபடியே இருந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு எழுந்து பேசினார். அவர் பேசியதாவது:

தி.மு.க. உறுப்பினர் அய்யப்பன் என்னைப்பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். நான் நேற்றே இதுபோன்ற புகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளேன்.

எனவே இருப்பினும் இன்று உறுப்பினர் தொடர்ந்து புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இது தொடர்ந்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும். எனவே தி.மு.க. உறுப்பினர்கள் என்னையும், தலைவர்களையும் புகழ்ந்து பேசுவதை குறைத்துவிட்டு மானிய கோரிக்கையை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.