உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் காலை முதல் மாலை வரை வேட்பாளர்கள் தொடர்ந்து பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்- 9 மாவட்டங்களில் அனல் பறக்கும் பிரசாரம்
அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன்
சென்னை:
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இன்றி சுயேட்சை சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அந்த வகையில் 27,003 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2,981 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 138 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 827 பேரும், 2,363 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 6,064 பேரும், 2,779 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 10,792 பேரும், 19,705 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடங்களுக்கு 61,750 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் மொத்தம் 23,998 பதவிகளுக்கு 79,433 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்திக்கிறது.
இதுதவிர பா.ம.க., மக்கள் நீதிமய்யம், தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என 7 கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, அனிதா ராதா கிருஷ்ணன், கீதாஜீவன், சக்ரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், கணேசன் உள்ளிட்ட 30 அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தற்போது தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக கிடைக்க தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறார்.
காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தினமும் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்கிறார். சென்னை விமான நிலையம் அருகே உள்ள திரிசூலம், பொழிச்சலூரில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி திறந்த ஜீப்பில் சென்று வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் சொன்ன வாக்குறுதிகளில் இதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக பெருமையுடன் சொல்லி தி.மு.க.வினரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்கு கேட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு பகுதியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தாம்பரம் புறநகர் பகுதிகளில் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காஞ்சிபுரத்தில் எழிலரசன் எம்.எல்.ஏ., வண்டலூர் பகுதியில் ஏ.எம்.வி. பிரபாகரராஜா எம்.எல்.ஏ. ஆகியோரும் பிரசாரம் செய்து வாக்கு கேட்டு வருகின்றனர்.
முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார். நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய உத்தரவிட்டார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.
கிராமப்புற அடிப்படை வசதிகளுக்காக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்படி எண்ணற்ற சாதனைகளை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்டு வருகின்றனர். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்களும், எம்.எல். ஏ.க்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதே போல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வியூகம் வகுக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
தற்போது முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதே போல் மற்ற கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் ஒரு புறம் சூடுபிடித்தாலும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை துண்டு பிரசுரமாக அச்சடித்து வீடு வீடாக வழங்கி வாக்கு கேட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக உறவினர்களும், நண்பர்களும் உடன் சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் காலை முதல் மாலை வரை தொடர்ந்து பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். வேட்பாளர்களின் பிரசாரத்தை தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே வீடியோ எடுத்து கண்காணித்து வருகின்றனர்.
இதனால் 9 மாவட்டங்களிலும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்