November 3, 2024

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் சிங்கி யாதவ், ராஹி சர்னோபாத், மானு பாகெர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் சிங்கி யாதவ், ராஹி சர்னோபாத், மானு பாகெர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 17-7 என்ற கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 10-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே இதன் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சிங்கி யாதவ், ராஹி சர்னோபாத், மானு பாகெர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்து இருந்தனர். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) பந்தயத்தின் இறுதி சுற்றில் அஞ்சும் மோட்ஜில், ஸ்ரேயா சக்சேனா, காயத்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 43-47 என்ற புள்ளி கணக்கில் போலந்து அணியிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) பந்தயத்தின் தகுதி சுற்று முடிவில் ஸ்வப்னில் குசேல், சைன் சிங், நீரஜ் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலிடத்தை பிடித்தும், இஸ்வான் பெனி, ஜவான் பெக்லிர், பீட்டர் சிடி ஆகியோர் அடங்கிய ஹங்கேரி அணி 2-வது இடத்தை பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா-ஹங்கேரி அணிகள் நேற்று மோத இருந்தன. ஆனால் ஹங்கேரி அணியின் வீரர் பீட்டர் சிடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியின் எஞ்சிய சு வீரர்கள் அவருடன் இணைந்து போட்டியில் பங்கேற்க மறுத்து விட்டனர். இதனால் ஹங்கேரி அணி போட்டியில் இருந்து விலகியது. எனவே இறுதிப்போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கப்பதக்கத்துக்கான மோதலில் இந்திய அணி, 3-வது இடத்தை பிடித்த அமெரிக்க அணியை சந்திக்கிறது. 7-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 10 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.