புதுடெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:- இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 70 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக அவர்கள் தான் இருக்கிறார்கள். சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தி துறையில் இருந்து வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். இந்தியாவில் அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உலகின் மற்ற வளர்ந்த நாடுகளை போல அல்லாமல் இந்தியாவில் பால் வளத்துறையின் உந்து சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர். உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கால்நடைகள் லம்ப்பி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. கொசுக்கள் மற்றும் அசுத்தமான தண்ணீர் மூலம் பரவும் இந்த நோயால் கால்நடைகள் இறப்பை சந்திக்கின்றன. இந்த நோயை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கால் நடைகளுக்கு வேகமாக பரவி வரும் லம்ப்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும். 2025-ஆம் ஆண்டுக்குள் கால் நடைகளுக்கு புருசெல்லா தடுப்பூசி 100 சதவீதம் போடப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.