டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சிக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இங்கு மத்திய குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது மத்திய அரசின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ளது. இதனால் பணி நியமனம், பணி இட மாற்றத்தை மத்திய அரசுதான் மேற்கொண்டு வருகிறது. இதனை டெல்லி அரசு விரும்பவில்லை. அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது அரசு அதிகாரிகள் நியமனம், இடம் மாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் என்பது தேவையானது, அவசியமானது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்குவது என்பது சட்டசபையை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. இதனால் டெல்லி அரசால் தனித்து மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது என டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் தொடர்பான விஷயத்தில் அதிகாரம் டெல்லி அரசுக்கு உள்ளதா? கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் டெல்லி அரசுக்குதான் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:- மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கையில்தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாதது தவறு. மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே டெல்லி சட்டசபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசு கூட்டாட்சியின்படியே இயங்குகிறது.
ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் அங்கமாகும். டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் டெல்லி அரசுக்கு உண்டு. 2019-ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்காவிட்டால் அரசியல் அமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது. சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தின்படி மட்டுமே கவர்னர் செயல்பட வேண்டும். டெல்லி துணை நிலை ஆளுனர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைபடியே செயல்பட வேண்டும். மாநிலத்தின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள முடியாது. டெல்லியில் துணைநிலை கவர்னரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கிறது. டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…