ரெயில் நிலையங்களுக்கு பயணம் செல்வதாக கூறி விட்டு செல்பவர்கள் கண்டிப்பாக தங்களது டிக்கெட்டுகளை காட்ட வேண்டும் எனவும், இல்லை என்றால் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை அன்று முழுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இரவுநேர ஊரடங்கின் போது வணிக வளாகங்கள் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இரவுநேர ஊரடங்கு இன்று இரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 10 மணிக்கு பிறகு எக்காரணம் கொண்டும் செயல்படக்கூடாது என அனைத்து மாவட்டங்களிலும் கடைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி யாராவது கடைகளை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைத்து கொரோனா பரவலை குறைப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் யாரும் வெளியில் சுற்ற வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு பிறகு கடைகளை திறந்து வைத்து யாரும் ரகசியமாக வியாபாரம் செய்யக்கூடாது எனவும், அது கண்டுபிடிக்கப்பட்டால் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற ஊரடங்கு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க சென்னை போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
ரெயில் நிலையங்களுக்கு பயணம் செல்வதாக கூறி விட்டு செல்பவர்கள் கண்டிப்பாக தங்களது டிக்கெட்டுகளை காட்ட வேண்டும் எனவும், இல்லை என்றால் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமாக ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவர்கள், மருந்து மாத்திரைகளை வாங்க செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான சான்றுகளை கட்டாயம் காட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவுநேர ஊரடங்கை கண்காணிப்பதற்காக சென்னையில் சுமார் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை இன்று இரவு மேற்கொள்ள உள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கும், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.
More Stories
பொங்கல் பண்டிகை: பஸ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு