November 5, 2024

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி – பிரதமர் மோடி, அமித்ஷா பாராட்டு

இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 62 கோடியைத் தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கடந்த 17-ம் தேதி 88 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு எதிராக 1 கோடிக்கு மேற்பட்டோர் (1,00,64,032) தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு கோடிக்கு அதிகமானோர் தடுப்பூசி போட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நடத்துபவர்களுக்கும் பாராட்டுக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை புதிய இந்தியாவின் வலுவான மற்றும் மகத்தான ஆற்றலின் பிரதிபலிப்பாகும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா ஒரு தொலைநோக்கு மற்றும் விடாமுயற்சியுள்ள தலைமைத்துவத்துடன் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதில் ஒரு நாடு எவ்வாறு முன்னுதாரணமாக இருக்கும் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.