சென்னை: எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பல மைல் தொலைவுக்கு பின்னோக்கி கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சாதகமாக வந்தபோது ஓ.பி.எஸ். அணி தலைவர்கள் அடுத்தகட்ட நட வடிக்கையை தீவிரப்படுத்தினார்கள். எடப்பாடி தரப்பில் இருந்து கணிசமானவர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களில் ஆயிரம் பேரை வலைவீசி பிடித்து விட முயற்சிகள் நடந்தது. இதற்கிடையே 36 எம்.எல்.ஏ.க்கள், 15 மாவட்ட செயலாளர்கள் தங்கள் பக்கம் வர தயார் நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை திட்டமிட்டு பரப்பினார்கள். இவை அனைத்துக்கும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதையும் படியுங்கள்: உலகளவில் டுவிட்டரில் டிரெண்டாகும் ‘ஒற்றை வார்த்தை சவால்’ ஓ.பி.எஸ். அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் பக்கம் செல்ல, சிலர் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். நேற்று மதியம் முதல் அவர்கள் அனைவரும் செல்போன் தொடர்புகளை துண்டித்து விட்டு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதுவரை இல்லாத அளவுக்கு திணறலை சந்திக்க தொடங்கி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டை அடுத்து அவர்கள் நம்பி இருக்கிறார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டிலும் வலுவான வாதங்களை, உரிய ஆதாரங்களுடன் முன் வைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்போதோ தயாராகி விட்டதாக சொல்கிறார்கள்.