அம்பத்தூர்:
சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி 153 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. வழக்கத்தை விட இந்த முறை இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மிகவும் இளம்வயது கவுன்சிலராக 21 வயதான மாணவி பிரியதர்ஷினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி 98-வது வார்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 5,253 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
பிரியதர்ஷினி மொத்தம் 8,695 வாக்குகள் பெற்றுள்ளார். இவரது தந்தை ஆறுமுகம் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தாய் சாந்தி.
பிரியதர்ஷினி தந்தை சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து பிரியதர்ஷினி கூறியதாவது:-
எனது தந்தை ஆறுமுகம், தாய் சாந்தி, அக்காள் ராஜலட்சுமி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பிரசாரத்தின் போது தந்தையின் ஆட்டோவிலேயே வாக்கு சேகரித்தேன்.
ஒவ்வொரு வீடு. குடியிருப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரடியாக சென்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரிடமும் சகஜமாக பேசி வாக்கு சேகரித்தேன்.
பள்ளிப் படிப்பின் போதே ‘டைபி’ அமைப்பிலும், எஸ்.எப்.ஐ. என்ற மாணவர் அமைப்புகளிலும் சேர்ந்து பொது சேவைகள் செய்தேன். இந்த வார்டில் கவுன்சிலராக போட்டியிட கட்சி முடிவு செய்தவுடன் அனுபவமே இல்லாத நான் எப்படி பணியாற்றுவேன் என்று நினைத்தேன்.
ஆனால் நான் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை பார்க்கும்போது கண்டிப் பாக வெற்றி வாகை சூடலாம் என்று நினைத்தேன். அதேபோன்று இன்று மக்கள் 8295 வாக்குகள் அளித்து சுமார் 5253 வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
நான் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது அனைத்து பகுதியிலும் முறையான குடிநீர் வசதி வரவில்லை என்று முறையிட்டனர். அதை உடனடியாக சீர் செய்து தருவதுடன் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக மாமன்றத்தில் எடுத்துரைப்பேன்.
இப்பகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து பட்டா வாங்கித் தருவதில் அதிக கவனம் செலுத்துவேன்.
பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் என்னிடம் உங்களைப் போன்று படித்த பட்டதாரிகள் இளம் வயதினர். அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினர். இதைப் போன்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி கவுன்சிலர் பிரியதர்ஷினி புதுடெல்லியில் உள்ள இக்னோ யுனிவர்சிட்டியில் எம்.ஏ.சமுதாயவியல் படித்து வருகிறார். இவர் தன்னுடைய கல்லூரி தோழிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து இந்த வெற்றியை பெற்றதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதேபோல் மாநகராட்சி 136-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 22 வயதான இளம்பெண் நிலவரசி வெற்றி வாகை சூடி உள்ளார். எம்.பி.ஏ. படித்து வரும் இவர் படித்துக் கொண்டே மக்கள் பணியை சிறப்பாக செய்வதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிலவரசி கூறியதாவது:-
தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரான எனது தந்தை துரைராஜ் கடந்த 35 ஆண்டுகளாக கட்சியில் இருந்து வருகிறார். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடினமான உழைப்பை பார்த்து வியந்து அதே உத்வேகத்துடன் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளேன்.
வார்டு முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்காமல் சுத்தமாக வைத்து இருக்க நடவடிக்கை எடுப்பேன். அதேபோல் இங்கு மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி கிடப்பதை தடுத்திடும் வகையில் மழைநீர் வடிகால்கள் அனைத்தும் துர்வாரி சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் 42-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட 22 வயதான ரேணுகா, 70-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 29 வயதான ஸ்ரீதணி மற்றும் 196-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 25 வயதான அஸ்வினி ஆகியோரும் வெற்றி பெற்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளனர்.
இளம் வயது உறுப்பினர்கள் பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க அதிக கவனம் செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
More Stories
தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை