ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் இரட்டை பதவியால் கொள்கை முடிவுகளில் தாமதம் ஏற்படுவதாக கூறி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால் அ.தி.மு.க. பிளவுபட்டது. 98 சதவீதம் அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரிக்கின்றனர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஓ.பன்னீர் செல்வத்தை அதிரடியாக நீக்கினார்கள். இதையடுத்து அந்த பொதுக்குழு கூட்ட முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்களை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூர்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்ததால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து இடைத்தேர்தலுக்காக மட்டும் ஓர் இடைக்கால உத்தரவைப் பெற்றது.
அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வாசித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:- ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்கிறது. எனவே அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லும்.
அந்த கூட்டத்தில் அ. தி. மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் சரியானதுதான். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றி கிடைத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இறுதி வெற்றியை பெற்று உள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. முழுமை பெற்று உள்ளது. அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கைவசம் ஆகி உள்ளது. அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் இனி எடப்பாடி பழனிசாமி மட்டுமே தலைவர் என்ற நிலை உருவாகிறது. அதே சமயத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்து செல்வாக்குடன் திகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்துக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
More Stories
திமுக முப்பெரும் வழங்கும் விழா – விருது பெற்றோரின் போராட்ட வரலாறு:
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு