September 26, 2023

அ.தி.மு.க. சார்பில் ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதால் பெருமை அடைகிறேன்- எடப்பாடி பழனிசாமி

சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜி20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க. சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, ஜி20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது. ஜி20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். மேலும் ஜி20 தலைமைப் பொறுப்பு என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும். பிரதமர் தலைமையில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள ஜி20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.