November 2, 2024

அமைதி பற்றி ஓா் ஆராய்ச்சி

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

[responsivevoice_button voice=”Tamil Male”] ஒரு ஊர்லே ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு நாள் குரங்கைப் பற்றி ஆராய்ச்சி, பண்ணனும்னு ஆசைப்பட்டான் என்ன ஆராய்ச்சி அது? ஒரு குரங்கு தனியா இருக்கும்போது அது எப்படியெல்லாம் 

நடந்துருக்குதுங்கறதை ஆய்வு பண்ணுவது? ஒரு மனிதனைத் தனியா ஓர் அறையிலே அடைச்சுப் போட்டுட்டா… என்ன பண்ணுவான்? புத்தகம் இருந்தா எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுடுவான். 

தொலைக்காட்சிப் பெட்டி இருந்தா அதைப் போட்டுப் பார்த்துக்கிட்டிருப்பான்.

இல்லேன்னா பேசாமே படுத்துத் தூங்கிட்டிருப்பான். இதே மாதிரி ஓர் அறைக்குள்ளே புத்தகம், தொலைக்காட்சிப் பெட்டி… எல்லாம் வச்சி… வேண்டிய அளவுக்குத் தண்ணீர் ஆகாரம் எல்லாம் உள்ளேயே இருக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டு, ஒரு குரங்கை அங்கே தனியா விட்டுட வேண்டியது…

அடுத்த அறையிலே ஒரு சின்ன துவாரம் போட்டுட வேண்டியது. அதன் வழியா கவனிச்சா… குரங்கின் நடவடிக்கைகள் தெரியும். அதையெல்லாம் குறிப்பு எடுத்துக்கிட்டு அப்புறம் அந்தக் குறிப்புகளை வச்சிக்கிட்டு குரங்கின் மனோபாவம் பற்றி ஆய்வு பண்ணலாம். அதன்படி… ஒரு குரங்கைக் கொண்டுகிட்டு வந்து ஓர் அறையிலே விட்டான்.

பக்கத்து அறையிலே இவன் இருந்துக்கிட்டான். இவன் மெதவா… சத்தம் போடாமே… போயி அந்தச் சின்ன துவாரத்துலே ஒரு கண்ணை வச்சி அந்தப் பக்கம் என்ன நடக்கதுன்னு பார்த்தான். என்ன நடந்தது தெரியமா?

அந்தப் பக்கம் இருந்த குரங்கும் அதே துவாரத்துலே ஒரு கண்ணை வச்சிக்கிட்டு இந்தப் பக்கம் இவன் என்ன பண்றான்னு கவனிச்சிக்கிட்டருந்துதாம்! இது ஒரு வேடிக்கையான ஆராய்ச்சி. ஓர் உளவியல் ஆராய்ச்சி மையத்துலே உண்மையாவே குரங்குகளை வச்சி ஓர் ஆராய்ச்சி பண்ணினாங்களாம். அது எப்படின்னா…

பத்து குரங்குகளை ஒரு மரக் கூண்டுக்குள்ளே விட்டாங்க. அந்தக் குரங்குகளை தினமும் சோப்புப் போட்டு தினமும் துடைச்சி சுத்தமா வச்சிருக்கிறது… வேளா வேளைக்கு அதுக்குத் தேவையான உணவு… கொடுக்கறது. இப்படி அந்தக் குரங்குகளுக்கு எந்தச் சிரமமும் இல்லாமே பராமரிச்சிக்கிட்டு வந்தாங்க. கூண்டும் சுத்தம்… சூழ்நிலையும் சுத்தம்..

ஒரு ஈ கூடக் கிடையாது. அவ்வளவு தூய்மை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம்.

இன்னொரு மரக்கூண்டு. அதுலே பத்துக் குரங்குகள்… அதைக் குளிப்பாட்டறதே இல்லை… சுத்தப்படுத்தறதும் இல்லை. அந்தக் குரங்குகள் உடம்பு பூரா பேன்…கூண்டு பூராவும் ஈ…. அசுத்தமான சூழ்நிலை.

இப்படியே இந்தக் குரங்குகளைப் பராமரிச்சிக்கிட்டு வந்தாங்க. மூன்று மாசத்துக்கு அப்புறம் அந்தக் குரங்குகளை உளவியல் ரீதியா ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கறாங்க. அவங்க கண்டுபிடிச்ச உண்மை என்ன தெரியுமா? சுத்தமில்லாத சூழ்நிலையிலே வாழ்ந்த குரங்குகள் மிகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்ததாம்.

தினமும் குளிப்பாட்டி… வேளா வேளைக்கு சாப்பாடு போட்டு… சுத்தமா பராமரிக்கப்பட்டு வந்த குரங்குகள் மனசு அமைதியா இல்லையாம்! சஞ்சலத்தோட இருந்ததாம். இதே மாதிரி நாய்களை வைத்து ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தாங்களாம். அதுலயும் இதே முடிவுதானாம்!

சரி…

இதை வச்சி… அந்த உளவியல் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்கன்னா….

உங்கள் வாழ்க்கையிலே மனசஞ்சலங்கள் அதிகரிக்கும்போதுதான் நீங்கள் சாந்தமா இருக்கீங்க. நீங்கள் சஞ்சலங்களில் மூழ்கியிருக்கிறதாலே அமைதியற்று இருக்கிற தன்மையை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள் அப்படிங்கறாங்க.

ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா? நல்லா கவனிச்சிப் பாருங்க. ஒரு செல்வந்தனைவிட ஏழையா இருக்கிறவன் அமைதியா இருப்பான். இதுக்கு என்ன காரணம்? மரக்கூண்டுலே குரங்குகளுக்கு ஏற்பட்ட காரணம்தான். ஒரு மனிதன் ஒன்னைத் தேடி போறான். அவன் எதைத் தேடிப் போறானோ… அது அவன் கண்ணுலே பட்டுட்டா… அதுக்கப்புறம் அவன் நடை தளர்ந்துடுது. கிடைக்காத வரையில்தான் உற்சாக வேகம். இந்தச் செய்திகளிலேயிருந்து தாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னன்னா… கொஞ்சம் பொறுமையா உக்காந்து யோசனை பண்ணிப் பார்த்தா இந்தக் கருத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்!