December 6, 2024

அதிமுகவில் வன்னியர் செல்வாக்கு குறைகிறது!

அதிமுகவில் 5 அமைச்சர்கள் வன்னியர்கள் இருந்தும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினரோ அல்லது பல்கலை கழகங்களில் துணைவேந்தர் பதவியோ ஒன்றை கூட 5 அமைச்சர்களால் பெற்றுதர இயலவில்லை. அழுகின்ற குழந்தைக்கு கிளுகிளுப்பு ஆட்டுவதை போல் ஆதயத்திற்காக ஒருசில காரியத்தை செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் ஒருசில காரியங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முதல்வர் ஆதாயத்திற்காக சில காரியங்கள் செய்திருக்கலாம். குறிப்பாக இராமசாமி படையாட்சியார் படதிறப்பு விழா, மணிமண்டபம் அமைத்தது அவரது சிலைக்கு அரசு விழா எடுத்தது போன்றவற்றை குறிப்பிடலாம்.

தொலைநோக்கு பார்வையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீடு இதுவரை அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க வேண்டும் என்று 5 அமைச்சர்களும் முதலமைச்சரை சந்தித்து அழுத்தம் தரவில்லை என்பது தான் உண்மை . சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் வன்னியர்களுக்காக குரல் எழுப்புவதாகவும், வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்று தருவதில் அதிக ஈடுபாடும் முனைப்பும் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அவரால் கூட தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக கூட ஒருவரை கூட  நியமிக்க இயலவில்லை . காலியாக இருந்த தலைவர் பதவியை நியமித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கு மனம் இல்லாமல் இருந்து வருகிறார். இது ஏன் என்று கேட்பதற்கு வன்னியர் சமுதாயத்தில் உள்ள 5 அமைச்சர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. பாமக கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அதிமுகவின் தோழமை கட்சியாக இருந்தும் அவரது கோரிக்கையை கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவதில் மெத்தன போக்கையை கடைப்பிடிக்கிறார். டாக்டர் அன்புமணி அவர்களுக்கு நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடியிடம் அழுத்த கொடுத்த அமைச்சர்கள் ஒட்டுமொத்த சமுதாய நலனுக்காக அழுத்தம் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது அதிமுகவின் வழிநடத்துவதற்கான வழிகாட்டு குழு நியமனத்திலும் சி.வி.சண்முகம் மட்டுமே இடம் பெற முடிந்தது. சிறுபான்மையினர் கோட்டாவில் ஜே.சி.டி.பிரபாகரன் (கிறிஸ்துவ வன்னியர்) இடம் பெற்றிருந்தாலும் வன்னியர்களுக்கு 11 பேரில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்பதை கணக்கிட முடியும். 5 அமைச்சர்களும் தங்கள் பதவியை தக்கவைத்து கொள்வதற்கு முயற்சிக்கிறார்களே தவிர பெரும்பான்மையான வாக்குவங்கி தங்கள் பக்கம் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

அதே போல் தற்பொழுது உள்ள நிலையில் இருந்து அடுத்த நிலை துணை முதல்வர், முதல்வர் என்ற நிலையை அடைவதற்கான வழிவகைகளையும் இவர்கள் உருவாக்கிக் கொள்ள அச்சப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஒரு ஒ.பன்னீர்செல்வம், ஒரு வேலுமணி, ஒரு தங்கமணி போன்றோர் அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் பதவியை முன்னிறுத்தி தங்கள் சார்ந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அவர்களை போல் 5 வன்னிய அமைச்சர்களும் எந்த வகையிலும் முயற்சிகள் எடுப்பதில்லை. குறைந்தபட்சம் முதல்வர் பதவி மீதும் துணை முதல்வர் பதவி மீதும் இந்த 5 அமைச்சர்களும் ஆசைப்படுவது கூட இல்லை என்பது தான் உண்மை .

இந்த நிலையில் இந்த 5 அமைச்சர்களும் தற்பொழுது அதிமுகவில் அமைச்சர்களாக பதவி வகித்து வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி அதிகாரத்தில் அமைச்சர்களும் இருந்த ஏனைய வன்னிய அமைச்சர்களும் இதே நிலையை தான் கடைப்பிடித்து வருகிறார்கள். பதவியை விட்டுக் கொடுப்பதும் பதவி இழந்து கீழே விழுந்தவனை தூக்கி நிறுத்துவதும் தங்கள் கடமையென கருதுகிறார்கள் தவிர பதவி மீது ஆசைப்படுவது தவறு என்பதை உணர மறுக்கிறார்கள். மொத்தத்தில் ஊருக்கு உழைப்பவர்களால் மட்டுமே வன்னிய அமைச்சர்கள் இருப்பதினால் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு எதிர்காலத்தில் ஏதேனும் சிறு முயற்சிகள் எடுப்பார்களா என்று நினைத்து வாக்களிக்கும் வன்னிய சமுதாயம் கேள்வி எழுப்பி ஏமாந்து கொண்டிருக்கிறது. நாளை எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் தற்பொழுது உள்ள நிலையை விட மிக மோசமான நிலையிலேயே வன்னிய அமைச்சர்கள் பதவி வகிப்பார்களே தவிர மதிப்பிற்குரிய வகையில் இவர்கள் பதவியை வகிப்பது என்பது இயலாத காரியம்.

அதிமுக கட்சியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலையில் வன்னியர்கள் செல்வாக்கு குறைந்து வருவதையே காட்டுகிறது. இதன் தாக்கம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலித்தால் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் 5 வன்னிய அமைச்சர்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்தால் வன்னியர் தனி இடஒதுக்கீடு (உள் ஒதுக்கீடு) கோரிக்கையை நிறைவேற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமையலாம்.

– சாமி