December 6, 2024

அதிமுகவில் புயல் வீசுகிறது முதல்வர் பதவி போட்டி ஆரம்பம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேரவையில் வாக்களித்த ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 11 நபர்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எந்த நேரமும் தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலையில் இருப்பதால் முதல்வர் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை 11 சட்டமன்ற உறுப்பினர்களை பதவியை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பறிக்கப்பட்டால் முதல்வர் எடப்பாடியினரின் ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகலாம். அல்லது பெரும்பான்மையை இழக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த சூழ்நிலையில் திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த ஒ.பி.எஸ் அணியினர் பதவியை இழப்பார்கள். அதே நேரம் ஆட்சி கவிழ்ந்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானால் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று சொல்லி வாக்கு கேட்பதை ஒ.பி.எஸ் அணியினர் ஏன் ஏற்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டும் அதிமுக வெற்றியின் அவரிடம் ஒப்படைப்போம் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி பலநேரங்களில் பேசி வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அமைச்சர் செல்லூர்ராஜ் முதலமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி செக் வைத்துள்ளார். தேனி மாவட்டத்தில் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒ.பி.எஸ் அடுத்த முதல்வர் என்று போஸ்டர் அடித்து பிரச்சனையை ஊதி பெரிதாக்கி விட்டார்கள். இதை பார்த்த முதல்வர் எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி கலந்து ஆலோசித்து ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ பதுங்கி பாய்வதற்கு தயாராகி வருகிறார். இதற்கேற்றார் போல் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை தயார் செய்து மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்கும் முடிவு செய்து தனது சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துள்ளார். தற்காலிக முற்றுப்புள்ளி நிரந்தரமாக்கப்படுமா? அல்லது விலக்கி கொள்ளப்படுமா? என்பது போக போக தெரியும்.

– சாமி